தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்த வரும் நாட்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுச் சுகாதார நிபுணர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
கோடைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீர், மோர், கஞ்சி, இளநீர் போன்றவற்றை அருந்துவது உடலுக்கு நன்மையைத்தரும். வீட்டிலேயே இருந்தாலும், அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும் போது, ரத்தம் உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு பக்கவாதம் ஏற்படுகிறது.
குறிப்பாக குளிர், மழைக் காலத்தை விட, கோடைக்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதத்தால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. வீட்டிலேயே இருப்பதால் பலருக்கு அதற்கான காரணம் தெரிவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி: மாலை முரசு